search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணசாமி
    X
    கிருஷ்ணசாமி

    உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம்- கிருஷ்ணசாமி

    தேவேந்திரகுல வேளாளர் விவகாரம் தொடர்பாக எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இனி வருகிற உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம் என்று கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியல் இனத்தவர்கள் பிரிவில் பள்ளர் உள்ளிட்ட 6 ஜாதியினரை தனியாக பிரித்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும்.

    மேலும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து இந்த பிரிவினரை வெளியே கொண்டுவர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

    இது சம்பந்தமாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவிடம் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 4 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை வழங்கினார்.

    இது தொடர்பாக கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களுடைய கோரிக்கையை ஆய்வு செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு குழு அமைக்கப்பட்டது.

    ஆனால், இவ்வளவு கால தாமதம் ஆகியும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதை வேண்டும் என்றே தாமதப்படுத்துவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

    எனவே, விரைவில் இது சம்பந்தமாக முடிவு எடுத்து நல்லதொரு சிபாரிசை அரசிடம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி கடிதத்தை வழங்கி உள்ளோம்.

    மேலும் நாங்குநேரி தொகுதியில் எங்கள் சமூக மக்கள் அதிகமாக உள்ளனர். எனவே, அங்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆய்வு குழு எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நல்ல முடிவை சொல்ல வேண்டும்.

    எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இனி வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் ஆகியவற்றை எங்கள் சமூகத்தினர் புறக்கணிப்பார்கள்.

    பட்டியல் இனத்தில் உள்ள 6 எஸ்.சி. துணை பிரிவினருக்கு தனி பெயரிட வேண்டும். அந்த சமூகத்தை பட்டியலில் இருந்து விலக்க வேண்டும் என்பது ஒரு சமூக முன்னுரிமை ஆகும்.

    இது ஒரு சமூக தேவை. இதை அரசியலுடன் தொடர்பு படுத்தக்கூடாது. எங்களது இந்த பிரச்சனையை தேர்தல் கூட்டணியுடன் தொடர்பு படுத்தக்கூடாது. இது, எங்களுடைய நீண்ட கால கோரிக்கை.

    இந்த விவகாரம்தான் எங்களுடைய நீண்ட கால அரசியல் பாதையை தீர்மானிக்கும். தமிழ்நாடு மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.

    திராவிட கட்சிகள், ஜாதிகள் என்றென்றும் நிலைத்து இருக்கும். அதில் மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை என்று கருது கின்றனர்.

    இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் நாங்கள் சேர்க்கப்பட்டு இருப்பது எங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கமாக கருதுகிறோம்.

    தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நாங்கள் வெளியே வந்தால்தான் எங்கள் சமூகம் மாற்றம் அடையும். இந்த பட்டியலில் இருப்பது எங்களுடைய வளர்ச்சியை பாதிக்க செய்கிறது.

    தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் எதிர்காலத்தை திராவிட கட்சிகளால் தீர்மானிக்க முடியாது. திராவிட கட்சிகள் தங்கள் எண்ணத்தை ஜாதிகள் மீது திணிக்க கூடாது.

    யாருக்காவது அது போன்ற எண்ணங்கள் இருந்தால் தங்கள் ஜாதியை எஸ்.சி. பட்டியலில் சேர்ப்பதற்கு தயாராக இருக்கிறார்களா?

    வேளாளர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். வேளாளர் என்பது ஒரு தலைப்பு அல்ல, அது ஒரு சமூகத்தின் பெயர்.

    இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
    Next Story
    ×