search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு
    X
    டெங்கு

    பழனியில் சிறுமி உள்பட 3 பேருக்கு டெங்கு அறிகுறி

    பழனியில் டெங்கு அறிகுறியுடன் 3 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

    பழனி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் 100 முதல் 150 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளனர். இது கடந்த சில நாட்களாக 2 மடங்காக அதிகரித்துள்ளது. பலருக்கு மர்ம காய்ச்சல், வைரஸ், டெங்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சுதா மேரி (வயது 28), காமு (22) ஆகிய 2 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்படவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தற்போது மேலும் 3 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. பழனி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த அட்சயா (6), பெருமாள்புதூரைச் சேர்ந்த விக்னேஷ், சின்னராஜ் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் அசுத்தமான குடிநீர் போன்றவற்றால் காய்ச்சல் பரவி வருதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த முறை மாவட்டத்திலேயே அதிக அளவு டெங்கு பாதித்த பகுதியாக பழனி இருந்து வந்தது. தற்போதும் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

    தினந்தோறும் அதிக அளவு நோயாளிகள் காய்ச்சல் பாதிக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேர் வசிக்கும் பகுதிகளுக்கு சுகாதாரத்துறையினர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் காய்ச்சல் பரவுவதற்கான காரணிகள் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×