search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுமாப்பிள்ளை கொலையில் 5 பேர் கைது

    புதுவையில் புதுமாப்பிள்ளை கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுமாப்பிள்ளை கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    புதுவை குயவர்பாளையம் கருணாகர பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆனந்த பாலாஜி (வயது 31). எலக்ட்ரீசியனான இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி 25 நாட்களே ஆகிறது. ஆனந்த பாலாஜி தினமும் மாலை ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரில் உள்ள காபி சென்டரில் டீ குடிக்க செல்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று மாலை ஆனந்த பாலாஜி வழக்கம் போல் டீ குடிக்க காபி சென்டருக்கு சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்த பாலாஜியிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆனந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்த பாலாஜி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த கொலை குறித்து ரெட்டியார் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆனந்த பாலாஜியை வெட்டி கொலை செய்தவர்கள் குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த விக்கி, சிவசங்கரன், விக்னேஸ்வரன், ஸ்டீபன் மற்றும் மதன் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அதே பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரையும் போலீசார் இரவோடு இரவாக மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்த பாலாஜியை வெட்டி கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விக்கி போலீசாரிடம் கூறியதாவது:-

    ஆனந்த பாலாஜி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால் அவரிடம் ரெட்டியார் பாளையம் சிவகாமி நகரை சேர்ந்த அருள் (35), குயவர்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (32) மற்றும் திலாஸ்பேட்டையை சேர்ந்த கிஷோர் (24) ஆகியோர் வட்டி பணம் வசூல் செய்து தருவது வழக்கம்.

    அதற்காக அவர்கள் 3 பேருக்கும் மது குடிக்க ஆனந்தபாலாஜி பணம் கொடுத்து வந்தார். ஆனால், அவர்கள் 3 பேரும் வட்டி பணத்தையும் சேர்த்து மது குடித்து செலவழித்து வந்தனர். இதனை ஆனந்த பாலாஜி தட்டிக்கேட்டபோது அவர்கள் ஆனந்த பாலாஜியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இதையடுத்து ஆனந்த பாலாஜி இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். எனினும் ஆத்திரம் தீராத ஆனந்த பாலாஜி என்னை அணுகி அருள் உள்பட 3 பேரையும் கொலை செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார்.

    ஆனால், ஏற்கனவே அருள், மணிகண்டன், கிஷோர் ஆகியோர் எனது நண்பர்கள் என்பதற்காக நான் கொலை செய்ய மறுத்து விட்டேன். அதற்கு ஆனந்த பாலாஜி நீ கொலை செய்யாவிட்டால் பரவாயில்லை. வேறு ஆட்களை வைத்து 3 பேரையும் கொலை செய்கிறேன் பார்? என சவால் விடுத்தார்.

    நண்பர்களை கொலை செய்ய போவதாக என்னிடம் ஆனந்த பாலாஜி சவால் விட்டதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் ஆனந்த பாலாஜியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

    அதன்படி எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆனந்த பாலாஜியை வெட்டி கொலை செய்தேன்.

    இவ்வாறு விக்கி போலீசாரிடம் தெரிவித்தார்.

    Next Story
    ×