search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
    X
    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    சீமான் மீது சட்ட நடவடிக்கை- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமான் தெரிவித்த சர்ச்சை கருத்துக்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதாவின் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இடைத்தேர்தல் பற்றி வெளிவரும் கருத்து கணிப்புகள், கருத்து திணிப்பே ஆகும்.

    கடந்த சட்டசபை தேர்தலின் போதும் வேதாரண்யம் தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறினர். ஆனால் நான் 23 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இப்போதும் அதேநிலைதான் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியிலும் ஏற்படும்.

    அ.தி.மு.க. அநாகரீக அரசியல் செய்வதாக தி.மு.க. கூறுகிறது. அதை கேட்டு சிரிப்புதான் வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கூறி தி.மு.க. வெற்றி பெற்று விட்டது.

    இப்போது தி.மு.க.வை பற்றி மக்கள் தெரிந்து கொண்டார்கள். இனி அவர்களின் ஏமாற்று வேலை பலிக்காது. வருகிற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்.

    சீமான்

    சீமான் எதையும் வாய்க்கு வந்தபடி பேசும் மனிதர். இதற்கு முன்பும் பல கருத்துக்களை முரட்டுத்தனமாக கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக அவர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சசிகலா வெளியே வந்தால் அவர் அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்ளப்படுவாரா? என்பது பற்றி எனது கருத்தை கூறுகிறேன். கண்ணுக்கு முன் இருப்போரை பற்றிதான் பேச வேண்டும். சசிகலா முதலில் வெளியே வரட்டும். அவர் வந்த பின்பு இது பற்றி பேசுவோம்.

    கைத்தறி பொருள்களுக்கு இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. கைத்தறி விற்பனையை அதிகரிக்க ஏற்பாடு செய்து வருகிறோம், இதன் விற்பனை இலக்கை ரூ.300 கோடியாக உயர்த்த முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×