search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

    ராஜீவ்காந்தி படுகொலை குறித்து பேசிய சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    களக்காடு:

    நாங்குநேரி தொகுதி களக்காடு அருகே மேலக்கருவேலங்குளத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது-

    சீன அதிபரை வரவேற்க கூடிய வாய்ப்பை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இந்திய அரசு கொடுத்தது மிகப்பெரிய பெருமை. தமிழ்நாட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் தான் இந்திய அரசு சார்பாக சீன அதிபரை வரவேற்றனர். உரிய மரியாதை தமிழக முதலமைச்சருக்கு இந்திய அரசாங்கம் கொடுத்தது.

    ராஜீவ்காந்தி படுகொலை நடப்பதற்கு முன்பு எல்லா அரசியல் கட்சிகளும் விடுதலை புலிகளுக்கு ஆதரவான நிலையில் தான் இருந்தன. ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்பு தான் அரசியல் கட்சிகளின் நிலைபாடு மாறிவிட்டது. ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம் சாற்றப்பட்டுள்ள 7 பேரும் ஈழப்பிரச்சனைக்காக ஆதரவாக இருந்தவர்கள் தான். ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது.

    7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் என்னம். தமிழக அரசின் நிலைப்பாடும் அது தான். விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகின்றோம். ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் பேசியது கடும் கண்டனத்துக்குரியது. தமிழன் எதிரியை கூட கொல்லமாட்டான். எதிரியாக இருந்தால் கூட அடைக்கலம் கொடுக்க கூடியவன் தான் தமிழன். ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம் நாங்கள் தான் புதைத்தோம் என்று சீமான் பேசுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே சீமான் மீது மத்திய உளவுத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று பயங்கரவாதத்தை தூண்டுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    சீமான்

    முன்னாள் பிரதமரை நாங்கள் தான் கொன்றோம் என்று சொல்வது காங்கிரஸ் கட்சிக்கு விடுக்கப்பட்ட சவால் கிடையாது. தமிழர்களின் மானம், மரியாதை மீது களங்கத்தை மீண்டும் சுமத்துவதற்காக விடுக்கப்பட்ட சவால். இதை துடைக்க வேண்டும் என்று சொன்னால் சீமான் போன்றவர்களை தண்டிக்க வேண்டும். சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழ்களிடமும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு சீமான் அரசியல் நடத்தி வருகின்றார்.

    எந்த தமிழரும் ராஜீவ்காந்தி படுகொலையை ஆதரிக்கவில்லை. தமிழர் என்று சொல்லிக்கொள்ள சீமான் வெட்கப்பட வேண்டும். சீமான் மீது தமிழக அரசும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் குறை சொல்ல சீமானுக்கு என்ன தகுதி உள்ளது. 10 வருடமாக வாடகை கொடுக்காமல் வீட்டை காலி செய்யாத சீமான் ஒன்றும் யோக்கியன் கிடையாது. சீமான் மட்டும்தான் தமிழனா, நாங்கள் எல்லாம் என்ன சிங்களனா?.

    காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை விமர்சனம் செய்யும் சீமான் கட்சி யோக்கியமா என்பதை திரும்பி பார்க்க வேண்டும். வெளிநாடுக்ளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எல்லாம் எங்களுக்கு தெரியாது என்று சீமான் நினைக்கின்றாரா?,

    ஈழத்தமிழர்களை பற்றி பேசும் தகுதி வைகோவிற்கு உண்டு என்று சொன்னால் நாம் அதை ஏற்றுக் கொள்ளலாம். சீமான் கொடூரமாக பேசுவதை அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×