search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வாழப்பாடி அருகே சிறுவன் பலி- அங்கன் வாடி அமைப்பாளர், சமையலர் மீது வழக்கு

    வாழப்பாடி அருகே அங்கன்வாடி மையத்தில் இரும்பு கதவு விழுந்ததில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இது தொடர்பாக அமைப்பாளர் மற்றும் சமையலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலையடிவாரத்தில் புழுதிக்குட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம், தபால் நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.

    இக்கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்து போனதால், அருகிலுள்ள பொது சேவை மைய கட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி காலை அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்த குழந்தைகள் சிலர், அங்கு பயன்பாடின்றி மூடிக்கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் முன்புற இரும்புக்கதவில் ஏறி விளையாடினர்.

    துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட இந்த இரும்புக்கதவு, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அங்கன்வாடிக் குழந்தைகள் மீது விழுந்தது.

    இதில் அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான திருமுருகன்-ராதிகா தம்பதியரின் 3 வயது மகனான ஹரிபிரசாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இச்சிறுவனை மீட்ட அவரது பெற்றோர், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் கடந்த 7-ந் தேதி மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான்.

    இதுகுறித்து ஹரி பிரசாத்தின் தாய் ராதிகா (32) கொடுத்த புகாரின் பேரில், குழந்தைக்கு விபத்து ஏற்படும் வகையில் பணியில் கவனக்குறைவாக இருந்த அங்கன்வாடி மைய அமைப்பாளர் மலர்கொடி மற்றும் அங்கன்வாடி மைய சமையலர் ராணி ஆகிய இருவர் மீதும் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×