search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேமரா
    X
    கேமரா

    தி.நகரில் பலத்த பாதுகாப்பு- தீபாவளி திருடர்களை பிடிக்க கேமராக்களால் தீவிர கண்காணிப்பு

    தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் மட்டும் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக பகுதிகளில் சுமார் 1,000 கேமராக்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் பொதுமக்கள் தீபாவளி பொருட்களையும், புத்தாடைகளையும் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தி.நகரில் மற்ற இடங்களை விட கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

    வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் தி.நகரில் மக்கள் கூடுவார்கள். அதனால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

    இதையடுத்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை தி.நகரில் 2 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளன. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதனை திறந்து வைக்கிறார்.

    இந்த கட்டுப்பாட்டு அறையில் பெரிய அளவிலான தொலைக்காட்சிகள் அமைத்து அதன் மூலமாக போலீசார் கண்காணிக்கிறார்கள்.

    தி.நகரில் மட்டும் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக பகுதிகளில் சுமார் 1,000 கேமராக்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக 4 இடங்களில் உயர் கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் இருந்தபடி அதி நவீன பைனாக்குலர் மூலமாக போலீசார் கண்காணிப்பார்கள்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டுவார்கள். ஜவுளிக் கடைக்குள் புகுந்து பெண்களிடமும் ஜவுளி எடுப்பது போல நடித்து பெண்கள் சிலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுவார்கள். இவர்களை பிடிப்பதற்காக சிறப்பு படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற திருட்டு குற்றவாளிகள் புகைப்படங்கள் போலீசார் கம்ப்யூட்டர்களில் சேகரித்து வைத்துள்ளனர். இந்த புகைப்படங்களில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் கண்காணிப்பு கேமராக்கள் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாட்டை கடந்த சில ஆண்டுகளாகவே போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கம்ப்யூட்டரில் இடம் பெற்றுள்ள கொள்ளையர்களில் யாராவது பொதுமக்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு சென்று விட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போலீசாரை உஷார் படுத்தும் வகையில் ஒலி எழும்பும்.

    இதை வைத்து குற்றவாளிகள் எந்த இடத்தில் ஊடுருவி உள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து விடுவார்கள்.

    கூட்டத்தில் இளம்பெண்களை சில்மி‌ஷம் செய்யும் இளைஞர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 15 பெண் போலீசார் சுடிதார் மற்றும் சேலைகளில் மாறுவேடத்தில் கண்காணித்து வருகிறார்கள்.

    இதுதவிர குற்றப்பிரிவு போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×