search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பார் உரிமையாளர் ஆசைத்தம்பி, ஸ்ரீதர், ராம்குமார், விஜய் ஆகியோரை படத்தில் காணலாம்.
    X
    கைதான பார் உரிமையாளர் ஆசைத்தம்பி, ஸ்ரீதர், ராம்குமார், விஜய் ஆகியோரை படத்தில் காணலாம்.

    மன்னார்குடியில் ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள் பதுக்கிய பார் உரிமையாளர் - 3 பேர் கைது

    மன்னார்குடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள் பதுக்கிய பார் உரிமையாளர் மற்றும் 3 பேரை கைது செய்தனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி (வயது 40). இவர் மன்னார்குடியில் மதுபான பார் நடத்தி வருகிறார். மேலும் கார் சர்வீஸ் சென்டரும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆசைத்தம்பி தனது கார் சர்வீஸ் சென்டரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு மது விலக்கு  போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் திருவாரூர் மாவட்ட மதுவிலக்குபிரிவு  இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, தலைமைக் காவலர் வரதராஜன் பிரபாகரன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. 

    இதைத்தொடர்ந்து மன்னார்குடியில் உள்ள ஆசைத்தம்பியின் கார் சர்வீஸ் சென்டருக்கு நேற்று இரவு மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 பேர் பாண்டிச்சேரி மதுபாட்டில்களை தமிழ் நாட்டு மதுபாட்டில் மாற்றம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (23), திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதி சேர்ந்த ராம்குமார் (24) அதே பகுதியை சேர்ந்த விஜய்(22) ஆகியோர்  என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் பார் உரிமையாளர் ஆசைத் தம்பியையும் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். கார் சர்வீஸ் சென்டரில் பதுங்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பார் உரிமையாளர் ஆசைத்தம்பி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து மன்னார்குடியில் கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

    மன்னார்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×