search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி
    X
    தீபாவளி

    தீபாவளி பண்டிகை - கோவையில் இருந்து 24ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து 24-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து மேலாண் இயக்குனர் கூறினார்.
    கோவை:

    தொழில் நகரங்களான கோவை, திருப்பூரில் ஏராளமான வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    குறிப்பாக தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வேலை பார்க்கின்றனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து கோவை போக்குவரத்து மேலாண் இயக்குனர் கூறியதாவது:

    இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் தங்கி படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    அப்படி அவர்கள் செல்லும்போது பஸ் தட்டுப்பாட்டை குறைக்கவும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி மண்டலங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி வருகிற 24-ந் தேதி(வியாழக்கிழமை) கோவையில் இருந்து சென்னைக்கு 6 பஸ்களும், மதுரைக்கு 53 பஸ்களும், திருச்சிக்கு 41 பஸ்சும், தேனிக்கு 21 பஸ்களும், சேலத்திற்கு 37 பஸ்களும், ஊட்டியில் இருந்து சென்னைக்கு 2 பஸ்கள் என 160 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் திருப்பூரில் இருந்து சென்னைக்கு 2 பஸ்களும், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு 5 பஸ்களும், திருப்பூரில் இருந்து மதுரை, திருச்சிக்கு தலா 35 பஸ்களும், தேனிக்கு 17 பஸ்சும், சேலத்திற்கு 60 பஸ்களும் என 153 பஸ்கள் என மொத்தம் அன்றைய தினத்தில் 313 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் வருகிற 30-ந் தேதி(புதன்கிழமை) வரை கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, ஊட்டி மண்டலங்களில் இருந்து முதல் கட்டமாக 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் தேவையை பொறுத்து கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×