search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    ராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி

    திருவாடானை ஊரணி கோட்டையில் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். வானம் பார்த்த பூமியாக உள்ள ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் விவசாயம், குடிநீர் மழையை நம்பியே உள்ளது.

    பெரிய அளவில் கண்மாய்கள், குளங்கள் இருந்தாலும் மழையில்லாததால் வறண்டு காணப்பட்டு வந்தது. மேலும் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டதால் கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்தன.

    விவசாயிகளும் மழை இல்லாத காரணத்தால் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் குடும்பத்துடன் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    மாவட்ட மக்கள் தண்ணீர் தட்டுப்பாடின்றி வாழவும், விவசாயிகளின் கஷ்டங்கள் தீர்ந்து மாவட்டம் செழிப்பாக மாற வேண்டியும் கோவில், பள்ளிவாசல், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இந்த நிலையில் ராமநாதபுரம், கீழக்கரை, திருப்புல்லாணி, ஏர்வாடி, மண்டபம், பனைக்குளம் பகுதியில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தொடர்ந்து வானம் மப்பும், மந்தாரமாக காட்சியளித்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் தடையால் மக்கள் அவதியடைந்தனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி சிறிய குளமாக காட்சி அளித்தது. மழையின் காரணமாக உப்பளங்களில் உள்ள பாத்திகளில் மழை நீர் தேங்கின. மழையை எதிர்பார்த்து விவசாய பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள் இன்று பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கிராமங்களில் இருந்து கட்டிட பணிகளுக்காக வந்த தொழிலாளர்கள் மழையின் காரணமாக திரும்பிச் சென்றனர்.

    நேற்று காலை முதல் இன்று காலை 8 மணி வரை ஆர்.எஸ்.மங்கலத்தில் 30மி.மீ., தொண்டியில் 23.60 மி.மீ., திருவாடானை 14 மி.மீ., ராமநாதபுரம் 9.50 மி.மீ., வாலிநோக்கம் 9மி.மீ., பள்ளமோர்க்குளம் 8மி.மீ., பரமக்குடி 3.80 மி.மீ., மண்டபம் 4 மி.மீ., பாம்பன் 1.80 மி.மீ., தங்கச்சி மடம் 2.20 மி.மீ., வட்டாணம் 5 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தச்சவயல் பகுதியைச் சேர்ந்தவர் மலர் (வயது45). விவசாய தொழிலாளியான இவர் இன்று காலை திருவாடானை ஊரணி கோட்டையில் சூசை என்பவரின் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி மின்னல் தாக்கியதில் மலர் பரிதாபமாக இறந்தார்.

    மதுரையில் இன்று காலை முதல் தூரல் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.
    Next Story
    ×