search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.
    X
    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் தற்போது டெங்கு, மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் காய்ச்சல் காரணமாகவும், டெங்கு காரணமாகவும் மருத்துவமனையில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 45 பேர் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 7 ஆண்களும், 8 பெண்களும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது. அவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திருவள்ளுர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    மழை

    தமிழகத்தில் தற்போது பெய்ய தொடங்கியுள்ள மழை சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் என்ற போதிலும் அதனை எதிர்கொள்ள தயாராக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பருவ மழையால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் பல தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மருத்துவமனை டீன் பாவலன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டவர்கள் சென்றனர்.
    Next Story
    ×