search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை- மு.க.ஸ்டாலின்

    தோல்வி பயத்தில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

    விக்கிரவாண்டி:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரித்தார்.

    வருகிற 21-ந்தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் . அந்தத் தேர்தலில் உங்களுக்குத் தொடர்ந்து பணியாற்ற, சட்டமன்றத்திலும் அதே போன்று எங்களைப் போன்ற தலைவர்களிடத்திலும் உங்களின் பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி உங்களுக்காக உழைக்க பாடுபட ஒரு சிறந்த வேட்பாளராக, புகழேந்தியை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம்.

    இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது என்று உங்களுக்குத் தெரியும். ஏற்கனவே, இந்தத் தொகுதியில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இராதாமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார்.

    அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய அந்த இடத்திலிருந்து பணியாற்றும் வகையில் நம்முடைய புகழேந்தியை உங்களிடத்தில் நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம்.

    இன்றைக்கு நீங்கள் பல பிரச்சினைகளைச் சொன்னீர்கள். முக்கியமாக பட்டா பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, சாலை வசதி பிரச்சினை, சுகாதாரச் சீர்கேடு பிரச்சினைகள், பாம்பு வருவது, விளக்கு இல்லை, பேருந்து வசதி என இப்படி அன்றாடம் இருக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறினீர்கள். இது ஒன்றும், நிறைவேற்றுவதற்குக் கடினமான பெரிய பிரச்சினைகள் கிடையாது.

     

     பிரசாரத்தின் போது பெண்களிடம் குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின்.

    சீனாவின் பிரதமர் நேற்றைய தினம் நம்முடைய தமிழ்நாட்டில் மாமல்லபுரத்திற்கு வந்தார். பிரதமர் மோடி அவரை அழைத்துச் சென்று மாமல்லபுரத்தைச் சுற்றிக் காண்பித்திருக்கிறார். அந்த மாமல்லபுரத்தைப் பார்த்தீர்கள் என்றால், சிங்கப்பூரை மிஞ்சும் அளவிற்கு ஒருவார காலத்திற்குள் சுத்தம் செய்து அழகுபடுத்தி இருக்கிறார்கள்.

    வெளிநாட்டு அதிபர் வரும்போது சுத்தம் செய்கிறார்கள், செய்யட்டும். ஆனால், கடந்த 8 வருடமாக அ.தி.மு.க ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் கூறிய இந்தப் பிரச்சினைகளை எல்லாம் இந்நேரம் நிறைவேற்றி இருக்க வேண்டும் அல்லவா!

    அதற்கு, உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தியிருக்க வேண்டும். உங்கள் ஊருக்கென்று ஒரு கவுன்சிலர், பிரசிடெண்ட், சேர்மன் இருந்தார்கள் என்றால், இவற்றையெல்லாம் அவர்களே செய்து முடித்துவிடுவார்கள். நீங்கள் கூறிய அனைத்து பிரச்சினைகளும் உள்ளாட்சி அமைப்பின் மூலம் செய்து முடிக்கப்படக்கூடிய வேலைகள் தான்.

    கடந்த 8 வருடமாக உள்ளாட்சித் தேர்தலையே இந்த ஆட்சி நடத்தவில்லை. ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தி.மு.க வெற்றி பெற்றுவிடும். நாம் தோற்றுவிடுவோம் என்று, நடத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

    அதனால்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் அறிக்கைகளில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் உடனடியாக முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என்ற உறுதிமொழி கொடுத்திருக்கிறோம். எனவே, விரைவில் நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம், அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

    உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதும், நீங்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம்.

    இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இது அ.தி.மு.க ஆட்சியா? இல்லை. எடப்பாடி ஆட்சியா என்றால், இரண்டு பேரின் ஆட்சியும் கிடையாது. தற்போது தமிழ்நாட்டில் இருப்பது பி.ஜே.பி.,யின் ஆட்சி! மத்தியில் இருந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அடிமையாக இருந்து கொண்டிருக்கிறது.

    எனவே, இதற்கெல்லாம் ஒரு சரியான பாடத்தை நாம் வழங்க வேண்டும்.

    அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக, வருகிற 21-ந் தேதி நடைபெறவிருக்கக் கூடிய விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற இடைத்தேர்தலில் நீங்கள் சிறப்பான வகையில் கழக வேட்பாளருக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் வாக்கு கேட்டு உங்களிடத்தில் வந்திருக்கிறோம்.

    நீதிமன்றமும், நாம் கோரியபடி சரியான விகிதாச்சார அடிப்படையில் இடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவைக் கூட இந்த ஆளும் ஆட்சி நிறைவேற்ற முன்வரவில்லை.

    ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே செல்கிறார்கள். அவருக்கு நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் சிறப்பான ஆதரவினைத் தந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×