search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீப்பிடித்ததில் பட்டாசு ஆலை இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமானதை காணலாம்
    X
    தீப்பிடித்ததில் பட்டாசு ஆலை இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமானதை காணலாம்

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் பலி

    புதுவை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் பலியாகினர். காயம் அடைந்த இருவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் வடிவேலு. ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி குணசுந்தரி (வயது 45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் அய்யனார் கோவில் ஏரிக்கரை பகுதியில் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகல் சுமார் 2½ மணி அளவில் அங்கு எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. இதில் அந்த ஆலை இருந்த இடமே தெரியாத அளவுக்கு தரைமட்டமானது.

    இந்த வெடி விபத்தில் பெண் தொழிலாளர்கள் வைத்தீஸ்வரி (27), தீபா (35), ஞானம்மாள் என்ற வரலட்சுமி (44) ஆகிய 3 பேர் பலியானார்கள். மேலும், பட்டாசு ஆலை உரிமையாளர் குணசுந்தரி, கலாமணி (45) ஆகியோர் காயம் அடைந்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர், வில்லியனூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பட்டாசு ஆலையில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
    Next Story
    ×