search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவர் கைது

    அறந்தாங்கியில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலைக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ராஜா முகமது-ஜமீலா தம்பதியின் மகன் ராவுத்தர்கனி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்சி-தஞ்சை ரோட்டை சேர்ந்த முகமது உசேன் மகள் அப்சாத் பேகம் (வயது 22) என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 20 பவுன் நகை, ரொக்கப்பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூடுதலாக நகை, பணம் கேட்டு கணவர் மற்றும் மாமனார், மாமியார் உள்பட 11 பேர் கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் அப்சாத் பேகத்தை ராவுத்தர் கனி உடல் அளவிலும், மனதளவிலும் துன்புறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து அறந்தாங்கி வந்த ராவுத்தர் கனி மனைவி அப்சாத் பேகத்திற்கு தெரியாமல் திருச்சி வரகனேரியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜிடம் அப்சாத் பேகம் புகார் மனு அளித்தார்.

    இதையடுத்து கமி‌ஷனர் உத்தரவின்பேரில் அப்சாத் பேகத்தின் கணவர் ராவுத்தர் கனி, மாமனார் ராஜா முகமது, மாமியார் ஜமீலா, கொழுந்தன் ஷேக் முகமது, நாத்தனார்கள் மதினா ராணி, ‌ஷர்மிளா மற்றும் உறவினர்கள் உள்பட 11 பேர் மீது கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராவுத்தர் கனியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற 10 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராவுத்தர் கனியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்சாத் பேகம் குறித்து தவறான தகவல்களை அவர் அளித்துள்ளார்.

    மேலும் அப்சாத் பேகம் மன வளர்ச்சி சரியில்லாதவர் என்பது முற்றிலும் தவறான தகவலாகும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×