search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம்
    X
    மாமல்லபுரம்

    பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம்

    இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு இன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
    மாமல்லபுரத்துக்குள் நுழைய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் நிகழ்ச்சிக்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் போலீசார் தங்கி வருகிறார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.

    போக்குவரத்து, மருத்துவம், தீயணைப்பு, பேரிடர் மேலாண்மை, ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய அவசரகால தேவைக்கான துறையினர் நேற்று இரவே புராதன சின்னங்கள் பகுதி அருகே முகாமிட்டுள்ளனர்.

    புராதன சின்னங்கள் பகுதிகளை பாதுகாத்து வந்த தொல்லியல் துறை காவலர்கள் 28 பேரை வெளியனுப்பி விட்டனர். பிரதமரும் சீன அதிபரும் சுற்றிப்பார்க்க இருக்கும் அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய புராதன சின்னங்களை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அப்பகுதியில் திறந்தவெளியில் இருந்த கிணறுகள் அனைத்தும் வெடிகுண்டு மோப்ப நாயின் தீவிர சோதனைக்கு பின்னர் சவுக்கு மரங்களால் மூடப்பட்டது. உள்ளூர் மக்கள் மதியம் 1 மணியில் இருந்து நகருக்குள் கார், பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடந்து செல்ல கட்டுப்பாடு கிடையாது. இருவருக்கு மேல் குரூப்பாக, கூட்டமாக நடந்து செல்ல அனுமதி கிடையாது. கடலோரப் பகுதியிலும் இதே கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளை குதிரை படையினரும் கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணித்து வருகிறார்கள். வான் வழியாக கடலோர காவல்படை ஹெலிகாப்டர் ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறது.

    மாமல்லபுரம் டவுனுக்குள் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெறும் வரவேற்பு மேடைகளையும் அதில் நடனமாடும் கலைஞர்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு பின்னர் அனுமதி வழங்குகிறார்கள். அரசு தோட்டக்கலைஞர்களால் பழம், பூ, காய்கறி, கீரை, பாக்கு, வாழை மரம் போன்ற வேளாண் பொருட்கள் அனைத்தும் வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    தயாராக இருக்கும் அலங்கார நுழைவு வாயில்களில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. நான்கு புராதன சின்னங்கள் பகுதிகளையும் நவீன வசதியுடன் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க கூடிய சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்திய நடமாடும் போலீஸ் வாகனம் ரோந்து சுற்றி வருகிறது. தூசியும் கொசுவும் இல்லாத நகரமாக மாமல்லபுரம் இருக்க வேண்டும் என ஆய்வுக்கு வந்த மத்திய சுகாதார குழுவினர் கூறியதால் பேரூராட்சி நிர்வாகம் இரண்டு நாட்களாக கொசு மருந்துகள் அடிப்பதுடன் சாலைகளை சுத்தம் செய்ய சென்னையில் இருந்து காற்றுடன் கூடிய நவீன பிரஷ் வாகனம் வரவைத்து அப்பகுதிகளை தூசி இல்லாமல் சுத்தம் செய்துள்ளது.

    கல் அறுக்கும் சத்தமும், தூசியும் வராமல் இருக்க மூன்று நாட்களுக்கு கல் அறுக்கவோ, சிற்பங்கள் செதுக்கவோ கூடாது என்று மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டறைகள் அறிவுறுத்தப்பட்டதால் பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

    நகருக்குள் சுற்றித்திரிந்த மனநோயாளிகள் அனைவரையும் நேற்று இரவோடு போலீசார் வெளியேற்றினர். நேரடி ஒளிபரப்பு செய்ய புராதன சின்னங்கள் பகுதியில் தூர்தர்‌ஷன் டி.வி.க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால் அவர்கள் மட்டும் உள்ளே கேமராக்களை பொருத்தி ஒளிபரப்பு வாகனத்துடன் தயாராக இருக்கிறார்கள்.

    மற்ற தனியார், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேரடி ஒளிபரப்பு வாகனங்களை அருகே நிறுத்த அனுமதி கிடையாது. அதனால் இன்று அதிகாலையிலேயே மாமல்லபுரம் வந்து புராதன சின்னங்கள் பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாகனங்களை நிறுத்தி இடம் பிடித்து வருகிறார்கள்.

    Next Story
    ×