search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவு
    X
    மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவு

    மாமல்லபுரத்தில் விழாக்கோலம்: சீன அதிபர், மோடியை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள்

    சீன அதிபர், இந்திய பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற உள்ளதால் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இரு தலைவர்களையும் வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    சென்னை:

    அண்டை நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும், பரஸ்பர நல்லுறவும், வர்த்தக, கலாசார தொடர்புகளும் இருந்து வருகின்றன. சீனாவுடன் நல்லுறவை பேணுவதில் இந்திய பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புகிறார். இது தொடர்பாக இரு தலைவர்களும் ஏற்கனவே சிலமுறை சந்தித்து பேசி உள்ளனர்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறைசாரா சந்திப்பு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

    இந்த சந்திப்புக்காக சீனாவில் இருந்து புறப்பட்ட அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் சென்னை வந்து சேருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து சீன அதிபர்  ஜி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்.

    இதேபோல் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இன்று மதியம் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் சென்று அங்குள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். மாலையில் இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர்.

    சென்னை விமான நிலைய வாயிலில் வரவேற்பு ஏற்பாடு

    சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபரை வரவேற்கும் விதமாக பழைய விமான நிலையத்தின் 5-வது நுழைவு வாயில் அருகே வாழை மரம் மற்றும் கரும்பால் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் புதிதாக பசுமை புல்வெளியுடன் பூங்காவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    விமான நிலையம் முதல் கிண்டி நட்சத்திர ஓட்டல் வரை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் பள்ளி மாணவர்கள் நின்று சீன அதிபரை வரவேற்பார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டல் வரையிலும், இதேபோல் அந்த ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் 34 இடங்களில் ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளாக 10 பேரையும், ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 34 பேரையும் தமிழக அரசு நியமித்து உள்ளது.

    இரு பெரும் தலைவர்களின் வருகையையொட்டி மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் முக்கிய இடங்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகின்றன. மோடி-ஜின்பிங்கை வரவேற்று மாமல்லபுரத்தில் பனை ஓலையால் பின்னப்பட்ட பிரமாண்டமான அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.

    தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வரவேற்பு வாயில்

    பஞ்சரதம் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் பிரமாண்டமான அலங்கார வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 18 வகையான காய்கனிகள், பழங்கள் மூலம் இந்த வாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. ஜின்பிங்கை வரவேற்று தமிழ், இந்தி, சீன மொழி வாசகங்களுடன் கூடிய பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளன.
    Next Story
    ×