search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கூடுதல் விலைக்கு மது விற்று பிடிபட்ட டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

    மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்று பிடிபட்ட டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    மது விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் நிறுவனம் அரசின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பதை தடுக்க கூடிய அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வருபவர் ராமச்சந்தர். இவர் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள 4127 கடையின் மேற்பார்வையாளர் சுரேஷ் (40) என்பவர் கூடுதல் விலைக்கு மது விற்றதை அதிகாரி ராமச்சந்தர் கையும் களவுமாக பிடித்தார்.

    அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலாளர் மிரட்டியுள்ளார். பின்னர் தனது கார் டிரைவர் கலையின் மூலம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நடவடிக்கையில் இருந்து விடுவிப்பதாக அதிகாரி கூறியுள்ளார்.

    பணத்தை எடுத்துக் கொண்டு திருமிழிசையில் உள்ள அலுவலகத்துக்கு வரும்படி அதிகாரி கூறிவிட்டு சென்றார்.

    மதுபாட்டில் மீது கூடுதல் விலை வைத்து விற்றாலும் இவ்வளவு பெரிய தொகை கிடைக்காது என்பதை உணர்ந்த மேற்பார்வையாளர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகினார். சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கூடுதல் டி.எஸ்.பி. வெற்றி செழியனை அணுகி நடந்தவற்றை விளக்கி கூனார்.இதையடுத்து லஞ்சம் கேட்ட அதிகாரியை ‘பொரி’ வைத்து பிடிக்க திட்டமிட்டனர். அவர் கேட்டபடி ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை சுரேஷ் எடுத்து எடுத்து கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசிடம் கொடுத்தார். அதில் ரசாயன கலவை கலக்கப்பட்டது. போலீசாரின் அறிவுரையின்படி மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு இரவு சென்றார். அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்தனர்.

    மாவட்ட மேலாளரிடம் ரூ.20 ஆயிரத்ததை கொடுத்த போது போலீசார் கையும் களவுமாக அதிகாரி ராமச்சந்தரனை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் கலையும் பிடிபட்டார்.

    மேலும் அவரது அலுவலகத்தில் கணக்கில் வராமல் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கைப்பற்றினர். நள்ளிரவு 12 மணிக்கு இந்த கைது நடவடிக்கை நடந்தது. பின்னர் இருவரும் நீதி மன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×