search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது
    X
    மேகதாது

    கர்நாடகாவின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வலியுறுத்தல்

    மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சி தொடர்பாக, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோருக்கு  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கடைமடை பகுதிகளுக்கு மாத வாரியாக தண்ணீர் வழங்க தற்போது காவிரி படுகையில் உள்ள அணைகள் போதுமானது என காவிரி நதிநீர் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ள நிலையில், புதிய அணை கட்டவேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.

    கர்நாடகாவின் புதிய அணை கட்டும் திட்டத்தை எதிர்த்தும், நீதிமன்ற அவமதிப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நீர்மின் திட்டம் மற்றும் நதி பள்ளத்தாக்கு தொடர்பான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே, மேகதாது திட்டத்தை நிராகரித்த நிலையில், தற்போது கர்நாடகா மீண்டும் அந்த அமைப்பை அணுகி உள்ளது தெரிய வந்துள்ளது.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    கர்நாடக அரசின் திட்டத்தை ஏற்காமல் தவிர்ப்பதுடன், விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என நீர்மின் திட்டம் மற்றும் நதி பள்ளத்தாக்கு தொடர்பான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவுக்கு மத்தி அரசு அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    Next Story
    ×