search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெரம்பலூர் அருகே தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கான தவணையை செலுத்துமாறு தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அகரம்சீகூரை சேர்ந்தவர் ராஜா ( வயது 29), தொழிலாளி. இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி மோட்டார்சைக்கிள் வாங்கினார். அதற்காக மாதந்தோறும் தவணை செலுத்தி வந்தார். சில மாதங்களாக கடன் தவணையை செலுத்த வில்லை.

    இதையடுத்து நிதி நிறுவன அதிகாரிகள், தவணையை செலுத்துமாறு ராஜாவிடம் அடிக்கடி நேரில் வந்தும், நோட்டீஸ் அனுப்பியும் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் அவர் தவணை பணத்தை செலுத்தாமல் இருந்து வந்ததால், அவரை சந்தித்து பேசிய நிதி நிறுவன அதிகாரிகள், தவணை பணத்தை சரியாக கட்டாவிட்டால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விடுவோம் என்று கூறியதுடன், போலீசில் புகார் செய்து சிறையில் தள்ளி விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டை விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் அப்பகுதி ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் ராஜா பிணமாக தொங்கினார். இதையறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் தான் ராஜா தற்கொலை செய்து கொண்டார், எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜாவின் தாய் கருப்பாயி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×