search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவாளிகளை ஆஜர்படுத்திய போலீசார்
    X
    குற்றவாளிகளை ஆஜர்படுத்திய போலீசார்

    திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - பெண் உள்பட 2 பேருக்கு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 4 கிலோ தங்க நகைகளை மீட்டனர்.
    திருச்சி:

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ம் தேதி அதிகாலை இந்த கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் 2 பேர் உள்ளே புகுந்து 30 கிலோ எடை கொண்ட ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், 7 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதற்கிடையே, திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டனை (34) போலீசார் பிடித்தனர். அப்போது போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் (28) தப்பியோடினான். மணிகண்டனிடம் இருந்து 4 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நகைகள் அனைத்தும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்தது.

    மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கொள்ளையடித்த நகைகளை பங்கு பிரித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது சிக்கி கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷை பிடிக்க போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு சுரேஷ் இல்லை. அங்கிருந்த சுரேஷின் தாய் கனகவள்ளியை (57) பிடித்து விசாரித்தபோது, கொள்ளையடித்த நகைகளில் 450 கிராமை அவர் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மணிகண்டன், கனகவள்ளி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், அவர்கள் 2 பேரையும் போலீசார் திருவாரூரில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இருவரையும் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார்.
    Next Story
    ×