
கோவை மாவட்டம் வால்பாறை பெரிய புதூரை சேர்ந்தவர் உதய பிரகாஷ் (வயது 30). விவசாயி. கடன் வாங்கி விவசாயம் செய்தார். ஆனால் போதிய விளைச்சல் இல்லை. இதனால் விரக்தியடைந்த பிரகாஷ் பூச்சிமருந்தை குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் சொக்கம் பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் சதீஷ்குமார் பிணமாக கிடந்தார்.
இது குறித்து சதீஷ்குமாரின் தாய் மற்றும் அவரது நண்பருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கதறி அழுதனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவிந்தனூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவரது மனைவி பூங்கொடி (23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராஜ்குமார் வங்கி உள்பட பல இடங்களில் கடன் வாங்கிருந்தார்.
சரியாக வேலை இல்லாததால் குடும்பம் நடத்த சிரமம் அடைந்தார். கடனையும் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.