search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகைக்கடையில் கொள்ளையடித்த மணிகண்டன், சுரேஷ்
    X
    நகைக்கடையில் கொள்ளையடித்த மணிகண்டன், சுரேஷ்

    திருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டி தப்பியோடிய 2வது கொள்ளையன் கைது

    திருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பியோடிய இரண்டாவது கொள்ளையன் சீராத்தோப்பு சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் நேற்று முன்தினம் சுவரில் துளை போட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
     
    முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்த 2 கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக நகைகளை பைகளில் அள்ளிப்போட்டு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    நகைக்கடை அருகில் உள்ள செல்போன் டவர்களில் பதிவாகியிருந்த செல்போன் எண்களை சேகரித்து விசாரணை நடத்தினர். முதலில் இது வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை என்று கூறப்பட்டது.

    ஆனால் கொள்ளை நடந்த இடத்தில் மிளகாய் பொடி தூவி சென்றது போன்ற செயல்கள் மூலம் இது உள்ளூர் ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

    இதையடுத்து திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிப்படை போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். 

    இதற்கிடையே, நேற்று இரவு 8 மணியளவில் திருவாரூர் அருகே உள்ள விளமல் அடியக்கமங்கலம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் இருவரும் தாங்கள் கொண்டு வந்த மூட்டையை வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    போலீசார் அவர்களை விரட்டி சென்றதில் ஒருவன் சிக்கினான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட வாலிபரிடம் இருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் மணிகண்டன் (32) என தெரிந்தது. லலிதா ஜூவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட இவர் திருவாரூர் அருகே உள்ள மடப்புரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர். கொள்ளையடித்த பிறகு தலைமறைவாக இருந்த மணிகண்டன் தனது பங்கு நகையை பிரித்து கொண்டு வீட்டுக்கு சென்றபோதுதான் வாகன சோதனையில் சிக்கியது தெரிந்தது. இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய கொள்ளையன் சீதாத்தோப்பு சுரேஷை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், நகைக்கடை கொள்ளையில் தப்பியோடிய சீராதோப்பு சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டான். பிடிபட்ட சுரேஷிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

    மேலும்,திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகை கொள்ளையில் 2 நாளில் குற்றவாளிகள் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×