search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரை ரவுடிகள் தாக்கிய காட்சி
    X
    போலீசாரை ரவுடிகள் தாக்கிய காட்சி

    போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது கொலை முயற்சி வழக்கு - உறவினர்கள் சாலை மறியல்

    புதுவையில் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் செயல்படும் ரவுடிகளால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படுவதால் அனைத்து ரவுடிகளையும் கண்காணிக்கும்படி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள் யார்- யார்? அவர்களுடைய தற்போதைய செயல்பாடு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    புதுவை கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி நகரில் ஜோசப் என்ற ரவுடி செயல்பட்டு வருகிறார். அவரை கண்காணிப்பதற்காக கரிக்கலாம்பாக்கம் போலீஸ்காரர்கள் சிவகுரு, மைக்கேல் ஆகியோர் நேரடியாக ஜோசப் வீட்டுக்கு சென்றனர். ஜோசப்பிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவரை விசாரித்ததற்கான சாட்சியமாக செல்போனில் போட்டோ எடுத்தனர். இதற்கு ஜோசப்பின் தம்பி அருணாசலம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கு போலீசார் முயன்றனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த ஜோசப், அருணாசலம் இருவரும் 2 போலீஸ்காரர்களையும் தாக்கினார்கள்.

    மேலும் ஜோசப்பின் நண்பரும், ரவுடியுமான ரோஸ் அய்யனார் என்பவரும் போலீஸ்காரர்களை தாக்கினார். இதில் நிலை குலைந்து போலீஸ்காரர்கள் கீழே விழுந்தனர்.

    ஆனாலும், தொடர்ந்து தாக்குதல் நடந்தது. இதில், போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். பின்னர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டார்கள்.

    காயம் அடைந்த இரு போலீஸ்காரர்களும் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

    இது தொடர்பாக கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 3 பேர் மீதும் 307 கொலை முயற்சி வழக்கு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அடித்து காயப்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தப்பி ஓடிய 3 பேரும் எங்கோ தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    தாக்கப்பட்ட போலீஸ் காரர்களில் சிவகுருவின் சொந்த ஊர் அபிஷேகப்பாக்கம் ஆகும். அவரை தாக்கிய ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் பொதுமக்களும் பங்கேற்றனர். இதனால் புதுவை - கடலூர் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை தவளக்குப்பம் போலீசார் சமரசப்படுத்தினார்கள். ஆனால், சிறிது நேரத்துக்கு பிறகு மறியலை கைவிட்டனர்.
    Next Story
    ×