search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரை ரவுடிகள் தாக்கிய காட்சி
    X
    போலீசாரை ரவுடிகள் தாக்கிய காட்சி

    புதுவையில் ரோந்து போலீசாருடன் ரவுடிகள் கட்டிப்புரண்டு சண்டை - வீடியோ

    வில்லியனூர் அருகே ரோந்து போலீசாருடன் ரவுடிகள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வில்லியனூர்:

    புதுவை காமராஜர் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.முக்கிய ரவுடிகளை கைது செய்தும், ஊருக்குள் நுழைய தடை விதித்தும் வருகிறார்கள்.

    மேலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று இரவு கரிக்கலாம்பாக்கம்- வில்லியனூர் மெயின் ரோட்டில் போலீஸ்காரர்கள் மைக்கேல், சிவகுரு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றனர்.

    ஆனால், அவர்கள் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தனர்.


     

    இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் நெருங்கிய போது ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் போலீசாரை தாக்க முற்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து போலீசாரும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    காயம் அடைந்த போலீஸ்காரர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியவர்கள் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி அய்யனார் (வயது 28) மற்றும் அவரது கூட்டாளிகள் ஜோசப்ராஜ், அருணாசலம் என்பது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் அய்யனார் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து தப்பி ஓடிய ரவுடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜோசப்ராஜ், அருணாசலம் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    ரோந்து சென்ற போலீசாரை ரவுடிகள் தாக்கி விட்டு தப்பி சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×