search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் ஒரு வீட்டில் மழை நீரை சூழ்ந்திருக்கும் காட்சி.
    X
    அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் ஒரு வீட்டில் மழை நீரை சூழ்ந்திருக்கும் காட்சி.

    தஞ்சை, நாகை, திருவாரூரில் விடிய விடிய பெய்த மழை - அதிராம்பட்டினத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
    அதிராம்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சையில் நள்ளிரவு 1 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. பிறகு விட்டு விட்டு இன்று காலை வரை பெய்தது.

    இதேபோல் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று அதிகாலையில் பெய்த கன மழையால் வீடுகள், போலீஸ் நிலையம் கால்நடை மருத்துவமனை ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இன்று அதிகாலை 2 மணியில் இருந்து பொது மக்கள் தூங்கமுடியாமல் மழை நீரில் தத்தளித்து பெரும் அவதிப்பட்டனர். அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த கஜா புயலுக்கு இப்பகுதியில் பொதுமக்கள் வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று அதிகாலையில் மழை கொட்டித்தீர்த்தது. மேலும் பலத்த இடி சத்தத்துடன் சுமார் 3 நேரத்துக்கும் மேற்பட்ட இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையால்  பழஞ்செட்டித்தெரு, காந்திநகர், கரையூர்தெரு, முத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் இன்று காலை வரை கண்விழித்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் போலீசார் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று ஒரு நாள்  பெய்த மழையினால் அதிராம்பட்டினம் கடற்பகுதி கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த 2 தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு கடல் பகுதியில் மழை விட்டு விட்டுபெய்தும் வருகிறது இதனால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

    நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் காலை வரை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம்
    பட்டுக்கோட்டை - 51.40
    அதிராம்பட்டினம் - 40.40
    பேராவூரணி - 26.20
    திருவிடைமருதூர் - 22
    மதுக்கூர் - 19
    வெட்டிக்காடு - 17.80
    ஈச்சன்விடுதி - 17.20
    பாபநாசம் - 10
    கும்பகோணம் - 15
    தஞ்சாவூர் - 10

    திருவாரூர் மாவட்டம்
    வலங்கைமான் - 41.2
    முத்துப்பேட்டை - 40
    மன்னார்குடி - 25
    நீடாமங்கலம் - 22.6
    திருத்துறைப்பூண்டி - 11.6
    குடவாசல் - 14.2
    திருவாரூர் - 12.4

    நாகை மாவட்டம்
    மயிலாடுதுறை - 29.80
    நாகப்பட்டினம் - 22.60
    வேதாரண்யம் - 22.60
    மணல்மேடு - 16
    சீர்காழி - 7
    கொள்ளிடம் - 4.60
    Next Story
    ×