search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

    தொடர் மழையினால் ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கரியாம்பட்டி, அம்மாபட்டி, மூலசத்திரம், கேதையறும்பு, அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ததாலும், ஆந்திராவில் மழை கொட்டி வருவதாலும் நடப்பட்டு இருந்த தக்காளி செடிகள் அழுகி வீணானது. இதே போல் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தக்காளி சேதமடைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டது.

    தினசரி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு 5 ஆயிரம் டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் இன்று 2 ஆயிரம் டன் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.

    கடந்த வாரம் 14 கிலோ கொண்ட தக்காளி ஒரு பெட்டி ரூ.70 முதல் ரூ.80 வரை மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பெட்டி ரூ.300 வரை வாங்கப்படுகிறது. வரத்து குறைந்ததால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சராசரியாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் தற்போது உள்ளூர் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ளது. தற்போது மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×