search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜீரோ பாயிண்டில் பாய்ந்து வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா தண்ணீர்.
    X
    ஜீரோ பாயிண்டில் பாய்ந்து வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா தண்ணீர்.

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 786 கன அடியாக அதிகரிப்பு

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 786 கன அடியாக அதிகரித்துள்ளதால் சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாடு தீருகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு ஒப்பந்தப்படி கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் கடந்த 28-ந் தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடுத்த உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கும், அன்று இரவே பூண்டி ஏரிக்கும் சென்று அடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு தொடக்கத்தில் 100 கனஅடியாக வந்த தண்ணீர் தற்போது 786 கனஅடி வீதம் பாய்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரிக்கு இந்த நீர் 587 கனஅடி வந்து சேருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 22.80 அடியாக பதிவானது. 553 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா தண்ணீர் வரத்து இதே அளவு இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் பட்சத்தில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 1000 மில்லியன் கனஅடியை எட்டும்.

    இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே புழல் ஏரிக்கு தண்ணீர் கிடைக்கும் போது சென்னையில் குடிநீர் சப்ளை சீராகும். சென்னை மக்களின் நீண்ட நாள் குடிநீர் போராட்டமும் முடிவுக்கு வரும்.

    புழல் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அண்ணா நகர், வியாசர்பாடி, பட்டேல் நகர், அம்பத்தூர், சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஏரியில் இருந்து பைப்லைன் மூலம் கீழப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும் தண்ணீர் அயனாவரம், கீழ்ப்பாக்கம், திரு.வி.க.நகர், கொளத்தூர், பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு சப்ளை ஆகிறது.

    சமீபத்தில் பெய்த மழையால் வறண்டு கிடந்த புழல் ஏரியில் தற்போது குட்டை போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஏரியில் 50 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரியில் 53 மில்லியன் கன அடியும் (மொத்த அளவு 1081 மி.கனஅடி), செம்பரம் பாக்கம் ஏரியில் 12 மி.கன அடியும் (மொத்த அளவு 3645 மி.கனஅடி) தண்ணீர் இருக்கிறது.

    Next Story
    ×