
மேட்டூரில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்படும்போது வெள்ள பாதிப்பை தடுக்க திருச்சி முக்கொம்பு அணை மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். அந்த தண்ணீர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அணைக்கரை கீழணையை அடைந்ததும், வீணாக கடலுக்கு திறந்து விடப்படும்.
இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவமழை கொட்டி தீர்த்ததால் கடந்த 10-ந்தேதி கீழணைக்கு முதற்கட்டமாக நீர் வர தொடங்கியது. அதில் கீழணை 8 அடிகள் எட்டிய நிலையில் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2120 கன அடி தண்ணீரும் , மீதமிருந்த உபரி நீரை கொள்ளிடம் வழியாக கடலுக்கு 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
பின்னர் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்ததால் கடந்த 15-ந்தேதி கீழணையில் இருந்து கடலுக்கு திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டது. தற்போது கர்நாடக நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை அதிகரித்ததால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. இதனால் காவிரியில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
திருச்சி முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால், பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று பகலில் அணைக்கரை கீழணையை சென்றடைந்தது.
வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையில் 7744 கன அடி தண்ணீர் வட வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. 2169 கன அடி தண்ணீர் வடக்கு ராஜன் பாசன வாய்க்காலிலும், 608 கன அடி தண்ணீர் தெற்கு ராஜன் வாய்க்காலிலும், 576 கன அடி தண்ணீர் குமிக்கி மண்ணாற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் இரண்டாவது கட்டமாக மீண்டும் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.