search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    பெண்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயலலிதா - அமைச்சர் செல்லூர் ராஜூ

    பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உந்துசக்தியாக செயல்பட்டவர், பெண்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயலலிதா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    மதுரை:

    மதுரையில் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு நல உதவிகள் வழங்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மீனாட்சி கல்லூரியில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண் சமுதாயம் பொருளாதார நிலையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் முதன்மை பெற்று விளங்க வேண்டும் என்று நாள்தோறும் சிந்தித்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார்.

    பெண் குழந்தைகளை பாதுகாக்கும் தொட்டில் குழந்தை திட்டம் முதல், மகளிர் சுயஉதவிக்குழு, மகளிர் காவல் நிலையம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி என்று எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத சிறப்பு திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா.

    வீடுகளில் பெண்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளையும் தந்தார். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உந்துசக்தியாக செயல்பட்டவர் ஜெயலலிதா. கர்ப்பிணி பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் வருவதற்கு முன்பு தமிழக அரசின் சீதனம் கிடைத்து விடுகிறது. இதற்கு காரணம் பெண்களின் எண்ணங்களை உணர்ந்த ஜெயலலிதாதான்.

    தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு திட்டமும் பெண்களுக்காக செயல்படுத்தவில்லை. எனவே பெண் சமுதாயம் ஜெயலலிதாவுக்கு நன்றி கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பெண்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். எனவே இந்த அரசுக்கு பெண்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலைராஜா, பரவை ராஜா, பிரிட்டோ, பைக்காரா கருப்பசாமி, கலைச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×