search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட மறு ஆய்வு ஒப்பந்தம் மேலும் தாமதம் ஆகலாம்: துரைமுருகன்

    பரம்பிக்குளம்-ஆழியாறு மறுஆய்வு ஒப்பந்தம் மேலும் தாமதம் ஆகும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகம்-கேரள மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுபற்றி திமுக பொருளாளரும் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வு குறித்த தமிழக - கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேட்டியளித்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், “ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இரு மாநிலங்கள் சார்பிலும் தலா 5 பேர் என 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என அறிவித்திருப்பதும்;

    “இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள பல்வேறு நதி நீர்ப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள முதற்கட்டமாக இந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறோம்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதும்; 31 ஆண்டுகளை நெருங்கி விட்ட பரம்பிக்குளம் ஆழியாறு “மறு ஆய்வு ஒப்பந்தம்” மேலும் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திமுக ஆட்சியில் போடப்பட்ட பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 9.11.1988ல் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலையில்- 1989-ல் மீண்டும் முதலமைச்சராக வந்த கலைஞர் தான் சீரிய முயற்சிகளை எடுத்தார்.  

    இரு மாநில மக்களும் பாரம்பரியமாகப் போற்றிப் பாதுகாத்துவரும் சகோதரத்துவ குணத்தின் அடையாளமாக, பல்வேறு கட்டங்களாக பல நிலைகளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்த மறு ஆய்வு தொடர்பான பணிகள் அடுத்தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணித்துவந்த நிலையில், 8 ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதை எண்ணிக்கூடப் பார்க்கவில்லை.

    குறிப்பாக முதலமைச்சராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் நீண்ட அமைதி காத்து வந்த பழனிச்சாமி, திடீரென விழித்து எழுந்ததைப் போல, இப்போது கேரளா முதலமைச்சரைச் சந்தித்திருப்பது வரவேற்புக்குரியது என்றாலும்;, “மீண்டும் பத்து பேர் கொண்ட குழு” என்று வெளிவந்துள்ள அறிவிப்பு தமிழக மக்களுக்கு குறிப்பாக மேற்கு மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது.

    பரம்பிக்குளம் அணை

    ஏற்கனவே இது போன்று “அரசு செயலாளர்கள், இரு மாநில தலைமைச் செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்தாய்வு” நடைபெற்றுள்ள நிலையில் - மீண்டும் குழு அமைப்பது பரம்பிக்குளம் ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் மேலும் கூடுதல் காலதாமதத்தை ஏற்படுத்தும் என்பதுடன்; இரு மாநிலங்களுக்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பயன்களையும், அதன் மூலம் எட்டப்பட்டுள்ள கருத்தொற்றுமைகளையும் பாழ்படுத்தும் விதத்திலும் அமைந்து விடும்.

    ஆகவே, “மீண்டும் குழு” என முதலில் இருந்து பேச்சுவார்த்தையைத் துவங்கி, தாமதத்திற்கு வழி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இந்த சந்திப்பு அமைந்து விடக்கூடாது என்றும்,- மறு ஆய்வு ஒப்பந்தத்தை விரைந்து ஒரு குறுகிய கால வரையறைக்குள் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்பு துறை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே இருக்கிறது.

    கேரள அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு - தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள மக்களின் நலன்களை மேலும் காலதாமதம் செய்யாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும், அது தொடர்பாக நிலுவையில் உள்ள நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×