search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணைவேந்தர் சூரப்பா
    X
    துணைவேந்தர் சூரப்பா

    என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ‘பகவத் கீதை’ பாடம் - துணைவேந்தர் விளக்கம்

    அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தத்துவவியல் பாடத்திட்டத்தில் ‘பகவத் கீதை’ இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மற்றும் இளநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தத்துவவியல் பாடத்திட்டம் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

    இந்திய-மேற்கத்திய பாரம்பரியங்களை ஒப்பிட்டு பார்த்து ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் தத்துவத்தில் ஒரு புதிய கருத்தை உருவாக்குவது, இலக்கியம் மற்றும் அறிவியலில் கற்பனைத்திறன், எண்ண ஓட்டங்களை ஊக்கப்படுத்துவது, அறிவியலுக்கும், மனித வர்க்கத்துக்கும் உள்ள இடைவெளியை சுயபரிசோதனை செய்து அதற்கு பாலமாக இருப்பது, தன்னைப்பற்றிய புரிந்து கொள்ளுதலை இன்னும் அதிகப்படுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தத்துவவியல் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் உள்பட பகவத் கீதை தொடர்பான பாடங்களும் இடம்பெற்று இருந்தன. மேலும் அதை மாணவ-மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த பாடத்திட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் 2019-ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப்பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில் இந்திய-மேல்நாட்டு தத்துவப்படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்து இருந்தார்.

    இதேபோல ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘என்ஜினீயரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அருகிவரும் நிலையில், அப்படிப்பில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடையே குன்றி வருகிறது. தற்கால தேவைக்கேற்ப என்ஜினீயரிங் பாடங்களை நவீனமாக மேம்படுத்தும் நடவடிக்கையே இப்போதைய தேவை. அதைவிடுத்து பகவத் கீதை போன்றவற்றை பாடத்தில் சேர்த்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை என்ஜினீயரிங் படிப்பினை மதிப்பிழக்கச்செய்யும். எனவே அண்ணா பல்கலைக்கழகம் தனது பொறியியல் பாடங்களில் இடம்பெறச் செய்துள்ள மதச்சார்புடைய அனைத்து பாடங்களையும் உடனடியாக நீக்கிவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழகம்

    இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேற்று மாலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

    அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கட்டாய பாடமாக இருக்கும் சமஸ்கிருதம் மற்றும் பகவத் கீதை உள்ளடக்கிய தத்துவவியல் பாடம் விருப்ப பாடமாக மாற்றப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் அந்த பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம். இல்லாதவர்கள் பட்டியலில் உள்ள மொத்த 12 பாடங்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பாடத்தை தேர்வு செய்து படித்து கொள்வதற்கான வகையில் மாற்றம் கொண்டு வரப்படும்’ என்று தெரிவித்தார்.

    Next Story
    ×