search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    சாலையை சீரமைக்க கோரி தஞ்சையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் விரிவாக்க பகுதிகளிலும், மாநகரில் விடுபட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

    தஞ்சை ராஜீவ்நகர், ராஜீவ்நகர் வடக்கு, சோழன்நகர் ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பகுதிகளில் எல்லாம் தார்சாலைகள் போடப்பட்டு இருந்தன. குழாய்கள் பதிக்க தார்சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு, பணி முடிந்தவுடன் மண் போட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் மண் உள்வாங்கியதால் பள்ளம் ஏற்பட்டு, சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

    இதனால் எந்த வாகனங்களிலும் செல்ல முடியவில்லை. நடந்து செல்வதாக இருந்தாலும் சகதியில் நடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என தெரியாமல் பள்ளத்தில் விழக்கூடிய சம்பவமும் நடக்கிறது. இந்த சாலையை சீரமைத்து, புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதன்காரணமாக நேற்று தஞ்சை-நாகை சாலையில் ராஜீவ்நகரில் அப்பகுதி மக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தியதுடன் வாகனங்கள் எதுவும் சென்றுவிடாதபடி சாலையிலும் அமர்ந்து கொண்டனர். சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சாலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என நீங்கள் வந்து பார்த்தாலே உங்களுக்கு புரியும். அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் பொதுமக்களாகிய நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என அப்பகுதி மக்கள் கூறினர். நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறோம். மறியல் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் நாங்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே மறியலை கைவிட்டு வாருங்கள். அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த மறியலால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×