search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நலத்திட்ட உதவி வழங்கியபோது எடுத்த படம்
    X
    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நலத்திட்ட உதவி வழங்கியபோது எடுத்த படம்

    சமூக பணியில் போலீசார் ஈடுபடுவது பாராட்டுக்குரியது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

    போலீசார் தொடர்ந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது பாராட்டுக்குரியது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    சிவகாசி:

    சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் உதவும் கரங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நலிவுற்ற ஏழைகளுக்கு கல்வி நிதி, மருத்துவ நிதி, ஆடைகள், உணவு பொருட்களை போலீசார் சார்பில் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் முதியவர்களின் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. தந்தை இல்லாத குழந்தையின் படிப்பு செலவை இன்ஸ்பெக்டர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் நோய் பாதிப்பு அடைந்த ஒரு பெண்ணின் மருத்துவ செலவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியகுளம் கண்மாய் பகுதியில் சேதம் அடைந்த சாலையை போலீசார் சீரமைத்துள்ளனர். போலீசாரின் சமூக சேவை பாராட்டுக்குரியது. போலீசார் என்றால் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள் என்ற நிலை இப்போது மாறி வருகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அனைத்தும் பொதுமக்களுக்கு சாதகமாகவே நடக்கிறது. இதனால் முன்பை விட ஏழை, எளிய மக்கள் தங்கள் குறைகளை போலீஸ் நிலையம் வந்து தயங்காமல் புகார் அளித்து நிவாரணம் பெறுகிறார்கள். பொதுமக்களுடன் நல்லுறவு கொண்டுள்ள சிவகாசி போலீசார் போல் மற்ற பகுதி போலீசாரும் முன்வர வேண்டும். அப்போது தான் மாவட்டத்தில் குற்ற செயல்கள் குறையும். விருதுநகர் மாவட்டம் முன்பு ஒரு காலத்தில் கலவர பூமியாக இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பொறுப்புக்கு வந்த பின்னர் அமைதி பூங்காவாக இருக்கிறது. இது தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், ராஜா, மலையரசி மற்றும் திருத்தங்கல் சீனிவாசன், பொன்சக்திவேல், வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், புதுப்பட்டி கருப்பசாமி, விஸ்வநத்தம் ஆரோக்கியம், லயன் லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×