search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டு
    X
    பூண்டு

    வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்வு

    வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்தது. கிலோ ரூ.230 வரை விற்பனை ஆவதால் ‘ரசம் வைப்பதிலும் சிக்கலா?’ என இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் புலம்பும் விஷயமாக இருப்பது வெங்காயம் விலை தான். உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயத்துக்கு போட்டியாக இப்போது பூண்டும் களம் இறங்கி இருக்கிறது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.30-க்கு விற்பனை ஆனது. ஆனால் இப்போது 8 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.240-க்கு பூண்டு விற்பனை ஆகிறது. இந்த விஸ்வரூப விலையேற்றத்துக்கு விளைச்சல் மற்றும் வரத்து குறைவுதான் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டு விலை குறித்து சென்னை கோயம்பேடு உணவுதானிய மார்க்கெட் வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூண்டு அதிகம் விளைகிறது. இங்கிருந்துதான் தமிழகத்துக்கு பூண்டு வரவழைக்கப்படுகிறது. குறிப்பாக மத்தியபிரதேசத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவில் பூண்டு இறக்குமதி ஆகிறது.

    முன்பு வழக்கமாக தினமும் 10 முதல் 15 லாரிகளில் பூண்டு வரத்து இருந்தது. தற்போது வடமாநிலங்களில் பெய்யும் பெருமழை காரணமாக பூண்டு விளைச்சல் வெகுவாக பாதித்து, வரத்தும் குறைந்திருக்கிறது. தற்போதைய சூழலில் பூண்டு 2 லாரிகள் மட்டுமே வருகிறது. இதன்காரணமாக பூண்டு விலை ‘கிடுகிடு’வென உயர்ந்திருக்கிறது.

    தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மலைப்பூண்டு (முதல் தரம்) கிலோ ரூ.230-க்கு விற்பனை ஆகிறது. 2-ம் தர பூண்டு ரூ.210-க்கும், 3-ம் தர பூண்டு 180-க்கும் விற்பனை ஆகிறது. தற்போதைய சூழ்நிலையில் பூண்டு விலை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விளைச்சல்-வரத்து மீது ஏற்படும் தாக்கத்தை பொறுத்து விலை மாறுபடும். எனவே வெங்காயத்தை தொடர்ந்து பூண்டையும் அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட் விலையை காட்டிலும் சூப்பர் மார்க்கெட்களில் பூண்டின் விலை ரூ.5 முதல் ரூ.8 வரை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. உரித்த பூண்டின் விலை கூடுதலாக ரூ.2 சேர்த்து விற்கப்படுகிறது. தெருக்கடைகளில் ரூ.240 முதல் ரூ.245 வரை பூண்டு விற்பனை ஆகிறது.

    வெங்காயம் விலை உயர்வு காரணமாக தவிப்பில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சமையலுக்கு அடிப்படையான பூண்டின் விலையும் உயர்ந்திருப்பது கூடுதல் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து இல்லத்தரசிகள் கண்ணீர் விடாத குறையாக கூறியதாவது:-

    சமையல் என்றாலே வெங்காயமும், பூண்டும்தான் பிரதானம். ஆனால் இவை இரண்டின் விலையும் எட்டமுடியாத உயரத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. வெங்காயத்தின் விலையை பார்த்து சாம்பார், சட்னி வைக்கவே யோசித்தோம்? இப்போது பூண்டின் விலையை கேட்டால் ரசம் வைக்கக்கூட பயமாக இருக்கிறது. அடுத்து என்னென்ன பொருட்கள் விலை உயருமோ? என்று கவலையாக இருக்கிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×