search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலி 3 ஆக உயர்வு - பொது மக்கள் பீதி

    சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள குண்டிருசம் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் வயது (40). இவரது மனைவி ரேவதி (35). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் ரேவதிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரேவதி சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கண்ணந்தேரி மேட்டுக்காட்டானூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மணிகண்டன் (வயது 32). இவரது 3 வயது குழந்தை சபரிகுருவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    5 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சபரி குரு மேல் சிகிச்சைக்காக கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதனை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இதே போல வாழப்பாடி பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு ஒரு சிறுமி பலியானது குறிப்பிடதக்கது.

    வாழப்பாடி மற்றும் கொங்கணாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மேலும் பலருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அவர்கள் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருவதால் ஆஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இதில் 500-க்கும் மேற்பட்டோர் தினமும் வெளிநோயாளிகளாகவும், 100-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே உயிர் பலிகளை தடுக்க காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×