search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது எடுத்தபடம்.
    X
    கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது எடுத்தபடம்.

    கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கம் தி.மு.க.: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு

    தொண்டர்களால் அ.தி.மு.க. வழிநடத்தப்படுகிறது என்றும், கருணாநிதியின் குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க. மாறி விட்டது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
    ஒட்டன்சத்திரம் :

    அ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாளையொட்டி ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். நகரசெயலாளர் உதயம் ராமசாமி வரவேற்றார். தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கிட்டுசாமி முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வைகைசெல்வன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் உழைப்பும், எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியும் தான் கடந்த 1967-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் ஆகும். அண்ணா மறைவுக்கு பிறகு, தி.மு.க.வை தனது குடும்பத்தின் அடிமை இயக்கமாக கருணாநிதி மாற்றி விட்டார். தி.மு.க.வினரை அவருடைய குடும்பத்துக்கு உழைக்கும் கொத்தடிமை களாக்கி விட்டனர்.

    கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவருக்கு பிறகு இன்பநிதி என்று ஒரு குடும்பத்தால் சுரண்டப்பட்டு தி.மு.க. பரிதாபமான நிலைக்கு ஆளாகி கொண்டிருக்கிறது. தி.மு.க. என்பது திருக்குவளை முன்னேற்ற கழகம் ஆகி விட்டது. ஆனால் அ.தி.மு.க.வோ தொண்டர்களால் வழிநடத்தப்படுகிற ஜனநாயக இயக்கமாக செழித்து நிற்கிறது.

    அ.தி.மு.க.வில் தான் சாமானியனும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடியும். பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை தரும் கட்சி அ.தி.மு.க. ஆனால் தி.மு.க.வோ ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் என செல்வந்தர்களை உயர்த்தும் முதலாளித்துவ இயக்கமாகி விட்டது.

    மு.க.ஸ்டாலின், கருணாநிதி

    தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இருந்தது. கொலையும், கொள்ளையும், நில அபகரிப்பும் தலைவிரித்தாடியது. ஆனால் தற்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. வறுமை, வேலையின்மையை தகர்த்து இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறோம். நாம் யாரையும் அடிமையாக கருத மாட்டோம். அதேவேளையில் யாரிடமும் அடிமையாகவும் இருக்க மாட்டோம்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் 2006-2011-வரை தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடாக ரூ.26 ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் 2011-2019 வரை அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் 73 ஆயிரத்து 308 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    கருணாநிதி உயிரோடு இருக்கும்வரை ஒருபோதும் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சர் என்றோ, கட்சி தலைவர் என்றோ கூறவே இல்லை. இந்தி எதிர்ப்பில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். வருகிற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

    முடிவில் அரசு வக்கீல் சுரேஷ்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×