search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி
    X
    ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி

    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்

    நாளை மறுநாள் (செப்.24-ம் தேதி) மாலை 6 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முறைப்படி அறிவித்தது. இதனை அடுத்து இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன.

    திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி நாங்குநேரி தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்ய தயாராகி வருகிறது. அதிமுக தரப்பில் இருந்து இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. 

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக நாங்குநேரி தொகுதியை பாஜக விற்கு அதிமுக விட்டுக்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,  ' நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும், தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் அதிமுக ஆளும் கட்சி, திமுக எதிர்க்கட்சி என 2 கட்சிகளை தான் மக்கள் அங்கீகரித்து உள்ளனர் என்றார்.

    நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு அதிமுக விட்டுக்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் நாளை மறுநாள் (செப்.24 ம் தேதி) மாலை 6 மணிக்கு அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாளை மறுநாள்  (செப்.24 ம் தேதி) மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை  தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.  எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இந்த எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட  உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
    Next Story
    ×