search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போதையில் லாரியை ஓட்டிய டிரைவருக்கு ரூ.15ஆயிரம் அபராதம் - கரூர் கோர்ட்டு அதிரடி உத்தரவு

    புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போதையில் லாரியை ஓட்டிய டிரைவருக்கு ரூ.15ஆயிரம் அபராதம் விதித்து கரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
    கரூர்:

    கரூர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 26). லாரி டிரைவரான இவர், சம்பவத்தன்று லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் சென்றார். அப்போது லாரியை தாறுமாறாக ஓட்டி சிக்னல் எல்லைக்கோட்டை தாண்டி நிறுத்தினார்.

    இதையடுத்து அவரிடம் கரூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாரி முத்து விசாரணை நடத்திய போது கருணாகரன் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டியது, சிக்னலில் எல்லைக்கோட்டை தாண்டி நிறுத்தியது உள்பட 3 பிரிவுகளில் கீழ் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் விஜயகார்த்திக் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கு ரூ.10,000, தாறுமாறாக வாகனம் ஓட்டியதற்கு ரூ.5,000, சிக்னலில் எல்லைக்கோட்டை தாண்டி நிறுத்தியதற்கு ரூ.500 என மொத்தம் ரூ.15,500 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கருணாகரன் அபராதம் செலுத்தியதையடுத்து லாரியை போலீசார் விடுவித்தனர்.
    Next Story
    ×