search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இந்தி மொழியை அமல்படுத்துவதில் திருச்சி கோட்டத்துக்கு விருது - தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி

    தெற்கு ரெயில்வேயில் திருச்சி கோட்டம் இந்தி மொழியை அமல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதினை பெற்றுள்ளது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    திருச்சி:

    ரெயில்வேயில் இந்தி அலுவலக மொழியாக உள்ளது. அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் இந்தி அல்லாத மாநிலங்களில் ஆங்கிலம் அலுவலக மொழியாக காணப்படுகிறது.

    ரெயில்வேயில் இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தியை அமல்படுத்தும் கோட்டத்திற்கு ரெயில்வே வாரியம் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டில் தெற்கு ரெயில்வேயில் திருச்சி கோட்டம் இந்தி மொழியை அமல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதினை பெற்றுள்ளது.

    இது பற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘மத்திய அரசு இந்தியை நாடு முழுவதும் கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் ரெயில்வேயில் இந்தி பேசப்படாத மாநிலங்களில் இந்தியை அலுவலக பயன்பாடு மற்றும் பேச்சு பயன்பாடு உள்ளிட்டவற்றில் அமல்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

    கடந்த ஆண்டில் தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் திருச்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றனர்.

    தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தெற்கு ரெயில்வே பணியில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் திருச்சி கோட்ட ரெயில்வேயில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் 250 பேரில் தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மற்ற இடங்களில் வடமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் இந்தியை அமல்படுத்துவதில் திருச்சி ரெயில்வே கோட்டம் விருது பெற்றுள்ளதன் மூலம் தெற்கு ரெயில்வேயில் தமிழை விட இந்தி மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×