search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய 30 மது பார்களுக்கு சீல்வைப்பு

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கிய 30 மது பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கும் மது பார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் மூலம் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உதவி மேலாளர் (சில்லரை விற்பனை) தமிழரசன், கலால் ஆய்வாளர் ஜெயா ஆகியோர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் மற்றும் போலீசார் அதிரடியாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பெரம்பலூர், எசனை, வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், கிருஷ்ணாபுரம், தழுதாழை, தொண்டாமாந்துறை, பூலாம்பாடி, கை.களத்தூர், வி.களத்தூர் ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி 12 இடங்களில் மதுபார்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராமச்சந்திரன், உதவி கணக்கு அலுவலர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மற்றும் ஏ.டி. எஸ்.பி. பெரியய்யா, சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அதிரடியாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அரியலூர், திருமானூர், கயர்லாபாத், முடிக்கொண்டான் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி 14 இடங்களில் மது பார்கள் மற்றும் 4 பெட்டிகடைகளில் மதுபார்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் அதிகாரிகள் புகார் செய்தனர். அதன்பேரில் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×