search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    தலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

    தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில்ரமானி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தனது நீதிபதி பதவியை தஹில்ரமானி ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் கடந்த 6-ந்தேதி அவர் அனுப்பிவைத்தார்.

    இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கற்பகம் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தலைமை நீதிபதி அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் மீது ஜனாதிபதி இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, தலைமை நீதிபதியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு செய்த பரிந்துரையை ரத்து செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்த மனு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பதை முடிவு செய்வதற்காக, இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.பிரபாகரன் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-

    “ஐகோர்ட்டு நீதிபதியை இடமாற்றம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் உள்ளது. அவர் முடிவு எடுத்த பின்னர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் கொண்ட குழுவின் முடிவினை கேட்பார். அதன்படி, நீதிபதிகள் குழு ஆராய்ந்து, தங்களது முடிவை ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    ஆனால், தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி விவகாரத்தில் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு அவரை இடமாற்றம் செய்ய முடிவு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது. அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அந்த காரணத்தை தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. ஒரு மாநில டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுபவர் குறைந்தது 2 ஆண்டுகள் பதவி வகிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உள்ளது. ஆனால், தலைமை நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு வந்து ஒரு ஆண்டுதான் ஆகிறது. ஓய்வு பெற இன்னும் ஒரு ஆண்டுதான் உள்ளது. இந்த சூழ்நிலையில் அவரை இடமாற்றம் செய்துள்ளதால், அந்த முடிவை ரத்து செய்யவேண்டும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், “சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளின்படி, பாதிக்கப்பட்டதாக கருதும் நீதிபதிதான் வழக்கு தொடர முடியும். மற்றவர்கள் வழக்கு தொடர முடியாது” என்று கருத்து கூறினர்.

    மேலும், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டினால் திருத்தி அமைக்க முடியாது. தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் சமமானவர்கள்தான். நிர்வாக ரீதியில் மட்டுமே தலைமை நீதிபதி உயர் பதவியை வகிக்கிறார். அந்த வகையில் பணியிடம் மாற்றம் செய்யலாம் என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×