search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

    கோவையில் விரைவில் மினி பஸ் சேவை- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

    சென்னையை போல் கோவையில் விரைவில் மினி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டலத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 793 பேருக்கு ரூ. 164 கோடியே 79 லட்சத்தில் ஓய்வூதிய பணப் பயன்கள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது.

    போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள். வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் வரவேற்று பேசினார். இதில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் அகியோர் கலந்து கொண்டு ஓய்வுபெற்ற 793 பேருக்கு ஓய்வூதிய பண பயன்களை வழங்கினார்கள். அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 21 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ம் ஆண்டிற்கு ரூ. 893 கோடியில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அதில் கோவை போக்குவரத்து கழகத்துக்கு 170 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2019- 20-ம் ஆண்டில் கூடுதலாக 500 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் கோவை கோட்டத்துக்கு 46 பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பணி ஓய்வு பெற்ற 6,283 பேருக்கு பணபயன்கள் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி கோவை மண்டலத்தில் ஓய்வுபெற்ற 793 பேருக்கு பணப்பயன்கள் தற்போது வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தனியார் பஸ்களை போன்று லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் 500 பேர் கொண்ட கிராமத்துக்கும் போக்குவரத்து சேவையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது. சென்னையில் இயக்கப்பட்டு வருவது போன்று கோவையிலும் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டார். அதற்கு இணங்க கோவையில் விரைவில் மினி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

    மேலும் ஜெர்மன் வங்கி நிதியுதவி மூலம் 2 ஆயிரம் மின்சார பஸ்களும், பி.எஸ். 6 வகையான 12 ஆயிரம் பஸ்களும் வாங்கப்பட உள்ளது.

    இந்த பஸ்கள் கோவை, மதுரை, வேலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகருக்கு மட்டும் 300 மின்சார பஸ்களை வாங்க விரைவில் அனுமதி வழங்கப்படும். தற்போது நிதி நெருக்கடியிலும் தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் வருடத்துக்கு 5,500 கி.மீ. தூரம் இலவசமாக பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் குற்றாலம், கொடைக்கானலில் குடும்பத்துடன் தங்கிட போக்குவரத்து கழகம் சார்பில் தங்கும் விடுதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மகேந்திர குமார், முதன்மை நிதி அதிகாரி ராதாகிருஷ்ணன், துணை மேலாளர்கள் முத்து குமாரசாமி, பிரபு மற்றும் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×