search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
    X
    அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    அரசு ஆஸ்பத்திரியில் மின்விளக்குகள் எரியாததால் நோயாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்

    அரசு ஆஸ்பத்திரியில் மின்விளக்குகள் எரியாததால் நோயாளிகள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி, நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது.

    இங்கு திண்டிவனம் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் தினந்தோறும் உள்புற மற்றும் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக உள்புற நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டில், மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை.

    இதனால் இரவு நேரங்களில், நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். புழுக்கத்தினாலும்,கொசு கடியாலும் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று இரவும் உள்புற நோயாளிகள் பிரிவில், மின் விளக்குகள் எரியவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். பின்னர் அவர்கள் மெழுகு வர்த்தியை கையில் ஏந்தியபடி, நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து உள்புற நோயாளிகள் கூறியதாவது:-

    ஏழை மக்கள் பயன் பெறுவதற்காக இந்த ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள். ஆனால் இங்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை.

    குறிப்பாக வார்டுகளில் உள்ள மின்விளக்குகள் ஒன்றும் எரிவதில்லை. இரவில் இருள் சூழ்ந்துள்ளது. மேலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

    இது குறித்து, வார்டில் உள்ள நர்சுகளிடம் புகார் தெரிவித்தால், எங்களுக்கு தெரியாது விருப்பம் இருந்தால் இருங்கள் இல்லையென்றால் கிளம்பி போங்கள் என்று அலட்சியமாக கூறுகின்றனர்.

    ஆகையால்தான் நாங்கள் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம நடத்தினோம். நோயாளிகள் நலன் கருதி அதிகாரிகள் மின்விளக்கு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×