search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷி கர்மான் விருதுக்கு தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை முதலமைச்சரிடம் அமைச்சர் வழங்கிய காட்சி.
    X
    கிருஷி கர்மான் விருதுக்கு தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை முதலமைச்சரிடம் அமைச்சர் வழங்கிய காட்சி.

    தமிழக அரசுக்கு 5-வது முறையாக ‘கிருஷி கர்மான்’ விருது

    எண்ணெய்வித்து பயிர்களில் தமிழ்நாட்டின் சாதனைக்காக, 2017-18-ம் ஆண்டின் “கிருஷி கர்மான்’’ விருதுக்கு தமிழ்நாடு தற்போது மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    வேளாண் விளை பொருட்களின் உற்பத்தி மற்றும் அதன் திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும், அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    2011-12-ம் ஆண்டில், அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் பசுமைப் புரட்சி மற்றும் உணவு தானிய இயக்கத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உணவுதானிய உற்பத்தியில் தற்போது இருமடங்கு சாதனை அடையப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் முயற்சிகளாலும், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேளாண் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய சாகுபடி தொழில்நுட்பங்களாலும், வேளாண் உற்பத்தியில் உள்ள இடைவெளியினைக் குறைத்து, தமிழ்நாடு 2011-12, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் 100 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை அடைந்துள்ளது.

    தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால் தமிழகத்தில், வேளாண் உற்பத்தி அதிகரித்து உயரிய சாதனை அடைந்ததற்காக நான்கு முறை மத்திய அரசு “கிருஷி கர்மான்’’ விருதினை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.

    முதலாவதாக 2011-12ஆம் ஆண்டில் 101.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்ததற்காகவும், 2013-14 ஆம் ஆண்டில் 6.14 லட்சம் மெட்ரிக் டன் பயறுவகை உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

    2014-15ம் ஆண்டில் 40.79 லட்சம் மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி செய்து சாதனை அடைந்ததற்காகவும், 2015-16-ம் ஆண்டில் மீண்டும் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை அடைந்ததற்காகவும், இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து, 2016-17-ம் ஆண்டில் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவிய போதும், அரசின் சீரிய முயற்சிகளினால் 2017-18-ம் ஆண்டிலும் 107.133 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை எய்தப்பட்டுள்ளது.

    இதில் குறிப்பாக எண்ணெய் வித்துக்களில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியும், உற்பத்தித் திறனில் எக்டருக்கு 2,729 கிலோ என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. இது அகில இந்திய சராசரி உற்பத்தித் திறனான எக்டருக்கு 1284 கிலோ என்ற அளவை விட இருமடங்கிற்கும் அதிகமாக, அதாவது 113 சதவீதம் அதிகரித்துள்ளது.

    எண்ணெய்வித்து பயிர்களில் தமிழ்நாட்டின் இச்சாதனைக்காக, 2017-18-ம் ஆண்டின் “கிருஷி கர்மான்’’ விருதுக்கு தமிழ்நாடு தற்போது மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விருதினையும் சேர்த்து, 2011-12-ம் ஆண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை அரசு, வேளாண்மைத் துறையில் ஐந்து முறை “கிருஷிகர்மான்” விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
    Next Story
    ×