search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர், தொப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தக்காளிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

    கடந்த வாரம் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையே விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகாததால் கவலையில் இருந்தனர்.

    தற்போது தக்காளி விலை மேலும் வீழ்ச்சி அடைந்து 14 கிலோ பெட்டி ரூ.80-க்கு விற்பனையானது. மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கும் வெளி சந்தையில் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிக அளவு தக்காளி வரத்து உள்ளது. மேலும் உள்ளூர் வரத்தும் அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பறிப்பு கூலிக்கூட விலை கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர்.

    விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×