search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பெய்த மழை.
    X
    சென்னையில் பெய்த மழை.

    சென்னையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை

    வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது.
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை வட கிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரமாகி உள்ளது.

    வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக ஆந்திர எல்லைப்பகுதி மற்றும் தெலுங்கானா வரை நீண்டுள்ளது.

    இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட வட தமிழகத்தில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.

    சென்னையில் நள்ளிரவு 1 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் ஆக ஆக மழையின் தீவிரம் அதிகமானது.

    இடைவிடாது இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது.

    காற்று அதிகம் வீசாததால் நீண்ட நேரம் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது.

    சென்ட்ரல், எழும்பூர், தி.நகர், மயிலாப்பூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, மாதவரம், புழல், அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், கோயம்பேடு, வடபழனி, பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், நீலாங்கரை, திருவான்மியூர், ராயபுரம், காசிமேடு, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், அண்ணாநகர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    சென்னையில் கொட்டி தீர்த்த மழை.

    இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு சென்றனர். காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை விடாமல் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிக்கு புறப்பட்ட மாணவ-மாணவிகளும் மழையில் நனைந்தபடி புறப்பட்டு சென்றனர்.

    சென்னையில் கொட்டி தீர்த்த மழை.

    பாரிமுனை சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர், குளம் போல் தேங்கி கிடந்ததால் இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் ஸ்டார்ட் ஆகாமல் நின்று விட்டன. இதேபோல் தம்புசெட்டி தெரு, செம்பு தாஸ் தெருவிலும் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது.

    பாரிமுனை ரிசர்வ் பேங்க் சுங்கப்பாதை, எழும்பூர், சேத்துப்பட்டு ஸ்கூல் சாலை, வியாசர்பாடி, தி.நகர், ஆதம்பாக்கம், பல்லாவரம், அம்பத்தூர் பால்பண்ணை, கோயம்பேடு, அண்ணாநகர் சிந்தாமணி, பகுதியில் உள்ள சாலைகளிலும் அதிகளவு தண்ணீர் தேங்கி கிடந்தது.

    கீழ்ப்பாக்கம் தாசப் பிரகாஷ் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு வழிப்பாதையில் மழை நீருடன் சாக்கடை தண்ணீரும் தேங்கி கிடந்ததால் அந்த பகுதியை கடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது.

    சென்னையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

    இதுபற்றி வானிலை மைய அதிகாரி கூறுகையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழை இன்றிரவும் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
    Next Story
    ×