search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    கடைமடைக்கு செல்லும் தண்ணீர் கடலுக்கு செல்வதால் பாதிப்பில்லை- காமராஜ் பேட்டி

    கடைமடைக்கு செல்லும் தண்ணீர் கடலுக்கு செல்வதால் பாதிப்பில்லை என்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூரில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் கொள்கையான இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டு சரியான முடிவு எடுக்கும். உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது சரியான முடிவு இல்லை.

    மத்திய அரசு மீண்டும் தமிழகத்திற்கு வழங்கும் மண்எண்ணையின் அளவை கூடுதலாக உயர்த்தி வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அதை உறுதியாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதையாவது சொல்லி அரசியல் நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று சொன்னார்கள். இப்போது தண்ணீர் கடலுக்கு வீணாக சென்று கலக்கிறது என்று சொல்கிறார்கள்.

    காவிரி பாயும் கடைமடை வரை தண்ணீர் சென்றால் அதற்குப் பிறகு அடுத்த இடம் கடல் தான். கடைமடைக்கு எப்போது தண்ணீர் செல்கிறதோ அடுத்து அங்கிருந்து கடலுக்கு தான் செல்லும். இது அறிவியல் ரீதியான உண்மை. கடைமடையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத காரணத்தால் தண்ணீர் கடலுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால் இதைக் கூட விமர்சனமாக வைக்கக் கூடிய நிலையிலேதான் எதிர்க்கட்சியினர் இருந்து கொண்டிருக்கிறார்கள். எதையாவது பேசி இந்த அரசை விமர்சிக்க வேண்டும். குற்றங்களை கூற வேண்டும் என்பது தானே தவிர நடைமுறையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. எதைச் சொன்னாலும் மக்களிடத்தில் எடுபடும் என்று நினைக்கிறார்கள். ஒரு காலும் இதுபோன்ற பொய் பிரச்சாரங்கள் எடுபடாது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தோ தெரியாமலோ தளபதி என்று பெயர் வைத்து விட்டார்கள், அதன் காரணமாக தளபதி என்றால் போர் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு போர் புரிந்து கொண்டிருக்கிறார் . அது ஒரு மாதத்திற்குள் பிசு பிசுத்து போய்விடுகிறது . ஒரு பிரச்சினை என்றால் அதில் உண்மை இருக்க வேண்டும். இவர் ஆட்சியின் மீது குறை கூற ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார். அது ஒரு மாதம் கூட நிற்பது கிடையாது. ஏனென்றால் அதில் உண்மை கிடையாது.

    இவ்வாறு அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

    Next Story
    ×