search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனு கொடுக்க வந்த பொது மக்கள்
    X
    மனு கொடுக்க வந்த பொது மக்கள்

    கடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு பொது மக்கள் மனு

    கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    கரூர்:

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் கரூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ரமே‌‌ஷ், ஆனந்தன், திருநாவுக்கரசுராஜா உள்ளிட்டோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், திருமாநிலையூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைப்பினை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்ய வேண்டும். கரூர் சுண்ணாம்புக்கல் மார்க்கெட் அருகிலுள்ள நேதாஜி சுபா‌‌ஷ்சந்திரபோ‌‌ஸ் சிலையை பராமரித்து பாதுகாப்புக்காக இரும்பு வேலியுடன் கூடிய கூண்டு அமைத்திட வேண்டும். கரூர் நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் வெளி யேற்றுவதில் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது. அதனை உடனடியாக கண்டறிந்து சரி செய்ய வேண்டும். கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் சாலையோரமாக இறைச்சி கடைகள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஆங்காங்கே சுற்றிதிரியும் தெருநாய்கள் சாப்பிட்டு விட்டு, சிறு குழந்தைகளை கடிக்க பாய்கின்றன. எனவே அந்த தெருநாய்களை பிடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இறைச்சி கடைகளிலிருந்து கழிவினை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

    கடவூரில் உள்ள இயற்கை கிராம முன்னேற்ற அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், கடவூர் ஊராட்சியில் சுமார் இருபதாயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மருத்துவ சேவை கிடைக்கிறது. எனினும் ஊரில் திடீரென ஏற்படும் விபத்து, கர்ப்ப கால சிகிச்சைக்கு அழைத்து செல்வது உள்ளிட்டவற்றுக்காக தரகம்பட்டி, அய்யலூரிலிருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வர வேண்டி உள்ளது. இதனால் நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே கடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடவூரில் கேட்பாராற்று சுற்றிதிரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    கரூர் மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் அளித்த மனுவில், புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பி.வெள்ளாளப்பட்டி பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஏமூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏமூர் ரெயில்வே கேட் கீழ்புறத்தில் பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    கரூர் மாவடியான் கோவில் தெரு கண்ணாரசந்து பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், கண்ணார சந்து பகுதியில் 40 ஆண்டுகளாக வீடு கட்டி நாங்கள் குடியிருந்து வருகிறோம். நகராட்சிக்கு உரிய முறையில் வரி செலுத்துகிறோம். இந்த நிலையில் சில காரணங்களை முன்வைத்து ஆக்கிரமிப்பை அகற்றப்போவதாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் எங்களை காலி செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும். எனவே எங்களை அங்கேயே குடியிருக்க வைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    குளித்தலை வட்டம் கூடலூர் கிராமம் உடையாப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் பள்ளி, கோவில் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு மதுகுடிப்போரால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் பாதிப்படைகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் செல்வசுரபி, ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கரூர் அருகே கே.புதுப்பட்டி கருப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த நாச்சியம்மாள் (வயது 65) என்பவர் கோரிக்கை மனு அளிக்க நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையறிந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் ஆம்புலன்சு மூலம் நாச்சிம்மாள் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    Next Story
    ×