search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவிலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.
    X
    சங்கரன்கோவிலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

    சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்

    சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி சங்கரன்கோவில்-திருவேங்கடத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி மாவட்டம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கு வரவேற்புகள் இருந்தாலும், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதியினர் தென்காசி மாவட்டத்துடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளை சேர்க்க கூடாது என வலியுறுத்தினார். இதை வலியுறுத்தி மாவட்ட செயலாளார் தி.மு. ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்நிலையில் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என சங்கரன்கோவில் மாவட்டம் கோரிக்கை இயக்கத்தினர், அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோரை இணைத்து கொண்டு தனிமாவட்டம் கோரிக்கையை முன்வைத்து களத்தில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக கோரிக்கை இயக்கத்தினர் அமைச்சர் ராஜலெட்சுமி, மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து தனிமாவட்ட கோரிக்கை மனு கொடுத்தனர். 

    இந்நிலையில் சங்கரன் கோவிலை தனிமாவட்டமாக அறிவிக்கக் கோரி இன்று கடையடைப்பு, பேரணிக்கு அழைப்புவிடுத்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஒருங்கிணைப்புக்குழுவினர் கடையடைப்பு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரங்களை நகரில் உள்ள கடைகளுக்கு வழங்கினர்.

    இதில் நகர வர்த்தக சங்கத் தலைவர் முத்தையா, முன்னாள் அமைச்சர் தங்கவேலு, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைர் சுப்பிரமணியன், அ.தி.மு.க. வக்கீல் ராமேஸ்வரன், அரிமா சங்க மாவட்ட தலைவர் அய்யாத்துரை, நகைக்கடை அதிபர்கள் கண்ணன், மாரிமுத்து, சுழற்கழக செயலர் சங்கர், திமுக இலக்கிய அணி மாவட்ட செயலர் சுப்பையா, தாமரைக் கழகத் தலைவர் அரசமணி, ஜோதிபாண்டியன், பெருமாள் பாண்டியன், உள்ளிட்டோர் கடை கடையாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    இதற்கு ஆதரவு தெரிவித்து சங்கரன்கோவில், திருவேங்கடத்தில்  உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. ஆட்டோக்கள் இயங்கவில்லை. தொடர்ந்து அனைத்து பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் சங்கரன் கோவிலில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். இதை தொடர்ந்து கலெக்டரிடம் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக  அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
    Next Story
    ×