search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    கோவை சிறுவன், சிறுமி கடத்தி கொலை- குற்றவாளியை தூக்கிலிட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

    கோவையில் சிறுவன், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில், குற்றவாளியின் மரண தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    கோவையில் ஜவுளிக்கடை அதிபரின் 11 வயது மகளும், 8 வயது மகனும் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி கால் டாக்சியில் பள்ளிக்கு சென்றபோது கடத்தி செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் பொள்ளாச்சி அருகே உள்ள வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மோகன்ராஜ், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மனோகரன் மீதான வழக்கு  கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. பின்னர் மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

    இதனையடுத்து குற்றவாளி மனோகரனை எந்த நேரத்திலும் தூக்கிலிடுவதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் தொடங்கும் சூழ்நிலை இருந்தது.

    இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரி மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு வரும் 20-ம்தேதி வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளி மனோகரனை தூக்கிலிட அக்டோபர் 16-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. 
    Next Story
    ×